ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெருமவே வெற்றியீட்டுவார்!
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெரும வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர், 130 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று டலஸ் அழகப்பெரும ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார் என குறிப்பிட்டார்.
அத்துடன் டலஸ் அழகப்பெரும தரப்புக்கும் சஜித் அணிக்கும் இடையில் இன்று மாலை முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் சில குழப்பங்கள் இருந்தாலும், இன்று மத்தியஸ்தம் செய்து கலந்துரையாடி தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜேவிபி இன் தலைவர் அனுர திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.