சம்பந்தனின் இல்லத்திற்கு செல்லும் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள்!
ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு (Dullas Alahapperuma) ஆதரவளிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தோடு அவர்களை நேரில் அழைத்து கோருவதெனவும் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளையதினம் (20-07-2022) நடைபெறவுள்ள நிலையில், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்று (19-07-2022) மாலை 5.30இற்கு ஆரம்பமாகியிருந்தது.
இதன்போது, டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு உள்ள நன்மைகள் என்ன, தீர்மைகள் என்ன என்றும் அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்றும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கட்சித்தலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன், இருவரையும் ஆதரிக்காது வாக்கெடுப்பை நிராகரிப்பது தொடர்பிலும் பிரதிநிதிகள் கவனம் செலுத்தியதாகவும் தெரியவருகின்றது.
இருப்பினும், ஈற்றில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக இருந்தால் அவரிடத்தில் எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறப்பட வேண்டும் என்று கூட்டத்தி;ல் பங்கேற்ற பல பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட உடனடியாக தீர்க்கவல்ல பிரச்சினைகள் தொடர்பில் காலவரையறையுடனான உறுதிப்பாடு அவசியம் என்றும் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தனது இல்லத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் அவரை முன்மொழிந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகியோரை நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் டலஸ் மற்றும், சஜித் ஆகியோர் சம்பந்தனின் இல்லத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் செல்லவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதோடு, அவர்களை சந்திப்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் தற்போது காத்திருக்கின்றனர்.