தமிழகத்தில் விசிலடிக்காத டிடிவியின் குக்கர்! ஆட்டம் குளோஸ்
விசிலடிக்காத "குக்கர்"...டிடிவி தினகரன் ஆட்டம் குளோஸ்... நோட்டா உடன் போட்டி போடும் அமமுக அதிமுகவிற்கு எதிராக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து சட்டசபைத் தேர்தலில் தனி அணி அமைத்து களமிறங்கிய டிடிவி தினகரன் தலைகுப்புற விழுந்துள்ளார்.
கோவில்பட்டியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோல்வியடைந்தாலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அதே நேரத்தில் அவரது கட்சியான அமமுக வேட்பாளர்கள் பலரும் நோட்டா உடன் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் படு பரபரப்பாக உள்ளது. காலை முதலே அரசியல் களத்தில் அனல் பறக்க முடிவுகள் வெளியாகி வருகின்றன.
திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவிற்கு முன்னிலையில் உள்ளது. இரண்டு முறை ஆட்சியில் இருந்த மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கிய அதிமுக இந்த முறை எதிர்கட்சி வரிசையில் அமரப்போகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன், சசிகலா, ஆகியோரின் கை அதிமுகவில் ஓங்கியது. சசிகலா சிறைக்குப் போகவே எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக கட்சியை வழி நடத்தினர். அதிமுகவிற்கு எதிராக அமமுக கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன் இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்தார்.
சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டி என்று முதலில் அறிவித்தார் டிடிவி தினகரன். முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்ட டிடிவி தினகரனுடன் கடைசி நேரத்தில் இணைந்தது தேமுதிக. ஓவைசி கட்சியும் அமமுக உடன் இணைந்தது.
என்னதான் வியூகம் அமைத்தாலும் அதிமுக, திமுகவிற்கு மாற்று எந்த கட்சியும் இல்லை என்று சொல்லாமல் சொல்லி விட்டனர் தமிழக வாக்காளர்கள். டிடிவி தினகரன் தனி அணி அமைப்பதால் அதிமுகவின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்று அதன் மூலம் அதிமுக படு தோல்வியடையும் என்றும் பேசப்பட்டது.
தேர்தல் முடிவுகள் இப்போது உண்மை நிலவரத்தை கூறியுள்ளன. அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது. டிடிவி தினகரன் பிரிந்து சென்றதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக ஆளும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்தாலும் கவுரமான தோல்வியை பெற்றுள்ளது.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தோல்வி முகத்தில் உள்ளார்.
குக்கர் விசிலடிக்காமல் அப்படியே அடங்கிப்போய் விட்டது. சென்னையில் உள்ள பல தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்குகளையே அமமுக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் நோட்டாவுக்கும் அமமுக வேட்பாளருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
தீயசக்திகள், துரோக சக்திகளை விரட்ட வேண்டும் என்று கூறியே வாக்கு கேட்டார் டிடிவி தினகரன். அவர் போட்டியிட்ட தொகுதியில் கூட மக்கள் வெற்றி பெற வைக்கவில்லை என்பதுதான் சோகம்.