இலங்கை வந்த விமானத்தில் மதுபோதையில் தகராறு ; இந்தியப் பிரஜைகள் அதிரடி கைது
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த விமானத்தில், மதுபோதையில் விமானப் பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்ட மூன்று வெளிநாட்டவர்களை விமான நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இந்தியப் பிரஜைகள் எனவும், மற்றையவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியக் குடிமகன் எனவும் தெரியவந்துள்ளது.

வாக்குவாதம்
சிட்னியிலிருந்து புறப்பட்ட அந்த விமானத்தின் பயணத்தின்போது, இவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமானப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு பரிமாறுவது தொடர்பாக ஏற்பட்ட இத்தகராறின் போது, ஆத்திரமடைந்த அவர்கள் உணவுத் தள்ளுவண்டியைப் (Food trolley) பலமாகத் தள்ளியுள்ளனர்.
இருப்பினும், விமானத்தின் நுழைவாயிலுக்கோ அல்லது பிற பகுதிக்கோ எவ்விதப் பெரிய சேதமும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தங்களது முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், அங்கிருந்து இணைப்பு விமானம் மூலமாகப் புதுடெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், விமான நிலையப் பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்ட இம்மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தற்போது அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சில தகவல்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும், இலங்கை விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனமும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.