தமிழர் பகுதியில் வயோதிபர் அரங்கேற்றிய செயல் ; 94 பொதிகளில் சிக்கிய ஆபத்தான பொருள்
அம்பாறை - கல்முனைக்குடிப் பகுதியில் நடத்தப்பட்ட விசேட கூட்டுச் சோதனையின்போது, 6 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையும் கல்முனை சுங்க வரி திணைக்கள அலுவலகமும் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை (03) இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

போதைப்பொருள்
தென்கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை முகாமிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கல்முனைக்குடிப் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சோதனையிடப்பட்டதில், விற்பனைக்காக 94 சிறிய பொதிகளில் தயார்ப்படுத்தி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
அவ்வேளை கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடிப் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை சுங்க வரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.