மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை; பொறி வைத்து பிடித்த பொலிஸார்
கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடுகண்ணாவை பொலிஸாரால் நேற்று (22) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடுகண்ணாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புகைப்படம் எடுத்து அனுப்பி விற்பனை
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மின் கம்பத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின் கம்பத்தில் போதைப்பொருள் பொதியை மறைத்து வைத்துள்ள பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பி அதனை வந்து எடுக்குமாறு கூறி விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸாரால் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.