பயணிகள் பேருந்தில் போதைப்பொருள் ; போதையில் மிதந்த சாரதி ; ஓடும் பஸ்ஸில் சம்பவம்
பொலன்னறுவை சிறிபுரவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி உதவியாளரிடம் போதைப்பொருள் உள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து கிராதுருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் அந்த பேருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (13) குறித்த பேருந்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர விசாரணை
மதன மோதகம் எனப்படும் போதைப்பொருளின் 5 மாத்திரைகளை சாரதி உதவியாளர் தம்வசம் வைத்திருந்தமையை பொலிஸார் இதன்போது கண்டறிந்துள்ளனர்.
இதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகளை வேறு ஒரு பேருந்திற்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சாரதி மற்றும் சாரதி உதவியாளர் ஆகியோர் வைத்திய பரிசோதனைக்காக மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
இதன்போது சாரதி உதவியாளர் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என்ற போதிலும், பேருந்தை செலுத்திய சாரதி கஞ்சா போதைப்பொருளை உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இருவரும் கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த மாத்திரைகளை விநியோகித்த மருந்தகம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
