யாழில் தேவாலய சுருவத்தை உடைத்த போதை ஆசாமிகள்; NPP தீவக அமைப்பாளரும் கைது
யாழில் மது போதையில் மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையைச் சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உள்ளடங்கலாக 8 பேரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவிக்கையில்,
கடும் மது போதையில் இருந்த குறித்த குழுவினர்
மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை மது போதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் துரித நடவடிக்கையில் இறங்கி அந்தக் கும்பலை கைது செய்தனர்.
ஏனையோர் கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் தேடப்பட்டு வருவதுடன் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்கள் எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் (25) குறித்த ஆலயத்தின் பகுதியில் இருந்து மது அருந்தியதாக கூறப்படுகின்றது.
இதன்போது அங்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகளுடன் தகாத வார்த்தைகளால் நக்கல் கதைகள் கூறி முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கடும் மது போதையில் இருந்த குறித்த குழுவினர் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான சுருவத்தை அடித்து முழுமையாக உடைத்து சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சுருவத்தின் நிலை கண்ட குறித்த ஆலய நிர்வாகத்தினர் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்து சமயத்தைச் சேர்ந்த தரப்பினர் உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பொலிஸார் நிலைமையை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் 8 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.