இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள், விற்பனையாளர்களால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக் கையாளப்படும் ஒரு தந்திரோபாயம் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் புதிய வரி எதனையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) வசூலிக்கப்படும் முறையை மாத்திரமே மாற்றியமைத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

ஏமாற வேண்டாம்
அத்துடன் இதுவரை சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியானது வாகனம் விற்பனை செய்யப்படும் புள்ளியிலேயே வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய நடைமுறையின் கீழ் அந்த வரி வாகனம் இறக்குமதி செய்யப்படும் போதே சுங்கத்தில் (Customs) வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் புதிய நடைமுறையினால் வாகனங்களின் விலை அதிகரிக்காது, மாறாகக் குறையவே வாய்ப்புள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வரி செலுத்தாமல் தப்பிக்க முயன்றவர்களே இம்மாற்றத்தை எதிர்க்கின்றனர். எனவே, விற்பனையாளர்களின் இத்தகைய அடிப்படையற்ற கருத்துக்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.