சுற்றுலாப் பயணிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு
சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப பாதிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் பதிவொன்றில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
சுற்றுலாத் துறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளனர்.
எனவே, அரசாங்கத்தின் இந்த முடிவு முறையான ஆலோசனை இல்லாமல் செயல்படுத்தப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களை, இலங்கையில் வாகனம் செலுத்த அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தம் இலங்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
எனினும், இந்த திட்டம் அவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்.
சுற்றுலா தொழில்துறையில் உள்ள பலரிடமிருந்து தனக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு கவனமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.