மீண்டும் ஆரம்பமானது யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை
மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவின் திருச்சி விமான நிலையத்துக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான இண்டிகோ நிறுவனம், ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலானவிமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

விமான சேவை
இதன் கீழ், புதுடெல்லி – கொழும்பு மற்றும் பெங்களூரு – கொழும்பு இடையிலான தினசரி விமான சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், திருச்சி – யாழ்ப்பாணம் நேரடி விமான சேவையும் நேற்று முதல் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதன்படி, குறித்த நாட்களில் பிற்பகல் 1.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமான , பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேசவிமான நிலையத்தை வந்தடையும்.
பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி நோக்கி மீண்டும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விமான சேவையில் 88 பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்த நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, வடக்கு மாகாண மக்களுக்கு இந்தியாவுக்கான பயணங்களை குறுகிய நேரத்தில் மேற்கொள்ள வசதியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி – யாழ்ப்பாணம் நேரடி விமான சேவை, தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான நீண்டகால கலாசார, வர்த்தக மற்றும் குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமானத் தொடர்புகள் மீண்டும் வலுப்படுத்தப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகளும் மேலும் வளர்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.