விரிவுரையாளரின் முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு ; யாழ். கல்வியற் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், மன உளைச்சல் உள்ளாகி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ள நிலையில் தற்போது கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி, கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருவதாகவும், மன்றத்தின் செயற்பாடு தொடர்பில் அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியபோது, அவர் முறையற்ற வகையில் பேசியதாகவும் சக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விரிவுரையாளர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவியை இழிவுபடுத்தியதாகவும், இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், விரிவுரையாளரின் முறையற்ற வார்த்தை பிரயோகம் மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக மாணவி மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும், பின்னர் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, மாணவியின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.