போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலதிக விசாரணை
2020 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பேலியகொடை பொலிஸாரால் ஜீப் வண்டியொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்ற 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தொடர்பாகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினராலும் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த விசாரணைகளில், பேலியகொடை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்திச் சொத்துக்களைக் கொள்முதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, மஹர, கடவத்தை பகுதியில் 19.90 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு மற்றும் சிங்காரமுல்ல, களனி பகுதியில் 18 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சொத்துக்களின் தோராயமான பெறுமதி தலா 500 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இதன் மொத்தத் தோராய பெறுமதி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும்.
விசாரணைகளின்படி, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் இச்சொத்துக்கள் வாங்கப்பட்டதாகக் கருதப்படுவதால், பணச்சலவை தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அவற்றை முடக்குவதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.