நான்காம் முறையும் செயலிழந்த சிறுநீரகம்; 41 வயது நபருக்கு 5-வது சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை!
சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 41- வயது நபருக்கு ஐந்தாவது சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வங்கதேசத்தை சேர்ந்த் 41 வயதுக்கு ஆணின் உடலில் தற்போது ஐந்து நிறுநீரகங்கள் உள்ளன. இதில் இரண்டு இயற்கையாகவே உடலில் இருந்தவை. இரண்டு சிறுநீரகங்கள் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டவை. இந்த நான்கும் தற்போது செயல்படாததால் குறித்த நபருக்கு ஐந்தாவதாக புதிதாக மற்றொரு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.
சொந்தமாக தொழில் செய்து வரும் 41 வயது குறித்த நபருக்கு இயற்கையாக உடலில் இருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கவே 1994ம் ஆண்டு அவரது 14 வது வயதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அது பலனளிக்காததால் 2005ம் ஆண்டு மீண்டும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் பொருத்தப்பட்ட சிறுநீரகங்களும் தற்போது செயல்படவில்லை.
இந்நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு ஜனவரி மாதம் வந்திருந்தார். அவருடைய உறவினரே சிறுநீரகம் தானம் அளிக்க தயாராக இருந்தார். அவருக்கு ஜூலை மாதம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ஐந்தாவது சிறுநீரகத்தை மருத்துவர்களை உடலில் பொருத்தியுள்ளனர்.
பொதுவாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது peritoneum எனப்படும் அடிவயிற்று பகுதியை சுற்றியுள்ள சவ்வுப்பைக்கு வெளியே தான் பொருத்தப்படும். அது தான் சிறுநீரக செயல்பாட்டுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்கும் எளிதாக இருக்கும். ஆனால் இந்த நோயாளிக்கு ஏற்கெனவே நான்கு சிறுநீரகங்கள் இருப்பதால் அது சாத்தியம் இல்லை.
எனவே peritoneal cavity எனப்படும் அந்த சவ்வுப்பையை கிழித்து அதனுள் இந்த சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சரவணன் கூறுகையில்,
‘ஏற்கனவே இருக்கும் சிறுநீரகங்களை அகற்றினால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். வேறொருவரிடம் இருந்து ரத்தம் பெற்றால் நோயாளியின் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகமாகி புதிய சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும். எனவே புதிதாக இடம் கண்டறிந்து ஐந்தாவது சிறுநீரகத்தை சரியாக பொருத்தி உள்ளோம். நோயாளி தற்பொழுது சீரான உடல் நிலையுடன் இருக்கிறார் என கூறியுள்ளார்.
சிறுநீரக நிபுணர் ராஜீவ் லோசனா கூறுகையில்,
"நோயாளிக்கு சிறுவயதிலிருந்தே சிறுநீரக கோளாறு இருந்துவந்துள்ளது. எனவே இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தும் அது வெற்றிகரமாக முடியவில்லை. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடித்தவர்கள் ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை சீராக வைத்து எதிர்ப்பு சக்தியை குறைப்பதற்கான மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்" என்றார்.
குறித்த நபருக்கு கடந்த ஜூலை 10-ம் திகதி இந்த அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட நிலையில் ஒரு மாத காலமாக நோயாளியின் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.