தரம் குறைந்த 40 மருந்து மற்றும் அறுவைசிகிச்சை உபகரணப் தொகுதிகள் நீக்கம்
கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் தரம் குறைந்ததாகக் கண்டறியப்பட்ட 40 பிரதான மருந்து வகைகள் மற்றும் அறுவைசிகிச்சை உபகரணத் தொகுதிகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு மருந்து விநியோகப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான சிங்கள நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சந்தேகத்திற்கிடமான நோயாளர் மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, 'ஒண்டாசெட்ரான்' உள்ளிட்ட 10 மருந்து வகைகள் ஒரே நேரத்தில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அந்த மருந்துத் தொகுதிகளின் சர்வதேச தரம் தொடர்பில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை இதுவரை தெளிவான விளக்கமொன்றை வழங்கவில்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவவின் தகவலின்படி, கடந்த காலப்பகுதியில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களில் கொலோஸ்டமி, அஞ்சியோகிராம் கதீட்டர், போவிடோன் கதீட்டர், மருத்துவ ஊசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன.
அத்துடன், செபலெக்சின் வாய்வழி திரவம், மெட்ஃபார்மின், லிடோகெய்ன் ஊசி, டொக்சிசைக்ளின், மெதில்பிரெட்னிசோலோன், ஜி.டி.என் மாத்திரைகள், சல்பியூட்டமால் கரைசல், இமெக்சலோன் ஊசி, லாக்டோஸ் மற்றும் ஐ.வி. செஃபுரோக்சைம் உள்ளிட்ட மருந்துகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதிப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவான ஆய்வகமொன்றை நாட்டில் நிறுவுவதில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை இதுவரை தவறியுள்ளதாகவும் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சுகாதாரத் துறையினரின் கவனம் அதிகரித்துள்ள நிலையில், மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.