தியத்தலாவை கோர விபத்து; மருத்துவமனையில் இருவர் கைது
நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் தியத்தலாவையில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய பந்தய கார்களின் சாரதிகள் இருவரும் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இரு பந்தயக் கார்களின் சாரதிகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தறிகெட்டு ஓடிய கார்கள்
இவ் ஆண்டுக்கான “பொக்ஸ் ஹில்”கார் பந்தியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (22) பதுளை தியத்தலாவையிலுள்ள கார் பந்தியத் திடலில் இடம்பெற்றன. இதன்போது, எதிர்பாராத விதமாக பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கரொன்று பந்தயத்திடலை விட்டு விலகி அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 8 வயது சிறுமி, 4 போட்டி உதவியாளர்கள், இரு பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், "Fox Hill Super Cross 2024" கார் பந்தயப் போட்டி தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.