மத நல்லிணக்கத்தை சீர்குலைக்காதீர்கள் ; சஜித் வெளியிட்ட கண்டன அறிக்கை
கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் பிரித் ஓதிக்கொண்டிருந்த பௌத்த துறவிகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நடத்தப்பட்டு வரும் அமைதியான சத்தியாகிரகப் போராட்டத்தைக் கையாளும் விவகாரத்தில், ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் நடந்துகொள்ளும் முறைமையை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

துறவிகளுக்கான சுகாதார வசதிகளைக்கூட முடக்கியுள்ளதாகவும், மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பிற்காக அவர்கள் அமைத்திருந்த தற்காலிக நிழற்குடைகள் பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் குடிமக்கள் மற்றும் பௌத்த மகா சங்கத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வது ஜனாதிபதியின் பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், மத நல்லிணக்கம் மற்றும் அமைதி சீர்குலைவதைத் தடுக்க ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பௌத்த துறவிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தெவட்டகஹ பள்ளிவாசல் (Davatagaha Mosque) நிர்வாகத்திற்கு சஜித் பிரேமதாச தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.