ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர் ; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
ஜேர்மனியின் எல்லைப் பகுதியில் வைத்து, 49 வயதுடைய ஈழத்தமிழர் ஒருவர் உட்படப் பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருமேனியாவில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் குறித்த ஈழத்தமிழர், ஜேர்மனியில் புகலிடம் கோரும் நோக்கில் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரியா வழியாக ஜேர்மனிக்குள் செல்ல முயன்ற அவர், லிக்தன் மற்றும் ஹார்ப்ரன்ஸ் எல்லைப் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதியின்றிப் பயணித்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மிலனிலிருந்து நீண்ட தூரப் பேருந்தில் பயணித்த ஐந்து பேர் கொண்ட ஆப்கானியக் குடும்பம் ஒன்றையும் ஜேர்மன் பொலிஸார் புதன்கிழமை அதிகாலை கண்டறிந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குடும்பத் தலைவரிடம் இருந்த ஆப்கானிய அடையாள அட்டை போலியானது என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குக் கடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அந்தக் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், 900 யூரோக்கள் பிணைத்தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மீண்டும் ஆஸ்திரியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பேருந்தில் மறைந்திருந்த 49 வயதுடைய ஈழத்தமிழரும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
அவரிடமிருந்த கடவுச்சீட்டு மற்றும் ருமேனிய வதிவிட அனுமதி ஆகியன கடந்த ஏப்ரல் மாதத்திலேயே செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ருமேனிய அதிகாரிகளால் தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, அவரை மியூனிச்சிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், குறித்த நபர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக அதிகாரபூர்வ விபரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.