மீண்டும் எகிறும் பாணின் விலை!
இலங்கையில் பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்த வேண்டியதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளது.
எட்டு சதவீதமாக இருந்த வற் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோதுமை மா 21,000 ரூபா
கோதுமை மா மூடை ஒன்றின் குறைந்தபட்ச விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், கோதுமை மா தட்டுப்பாட்டினால் நாட்டில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தையில் ஒரு இறத்தல் பாணின் விலை 190 ரூபாவாகும் அதேவேளை ஒரு சான்விச்சின் 250 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாண் விற்பனை சுமார் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரிகள் மூடல்
பெருந்தொகையான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதால் விறகு விநியோகம் செய்யும் பெருமளவிலான மக்கள் வேலை இழந்துள்ளனர் என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் நாட்டின் தற்போதைய நிலவரப்படி பாண் இறத்தல் ஒன்று 500 ரூபா வரை செல்லும் என நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.