கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுத் தலைவரின் வேதனத்தை அதிகரிக்குமாறு நிதி பற்றிய குழு கோரிக்கை
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் வேதனத்துக்கு சமமான வேதனத்தை வழங்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக, அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரினது வேதனத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் வேதனத்துக்கு சமன் செய்ய இணக்கம் காணப்பட்ட போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
2024 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரின் வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமுலாகும் வகையில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுத் தலைவரின் வேதனமும் அதற்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்துகிறார்.
இதுவரை வேதனத்தை அதிகரிக்காததால் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்ட அவர், சம்பளத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரின் வேதனத்துக்கும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனத்துக்கும் இடையிலான வேறுபாடு இரண்டு மடங்காக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை ஊழலுக்கு எதிரான நிறுவனங்களின் அதிகாரிகளினது கௌரவத்தையும் செயல்திறனையும் பேணுவதற்குத் தடையாக அமையலாம் என்பது அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் நிலைப்பாடாக உள்ளது.