விஜய் பிரசார கூட்டம் ; பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு ; விசாரணைக்கு ஆணைக்குழு நியமிப்பு
தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் பகுதியி்ல் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர்.
இந்தநிலையில், சனநெரிசலில் சிக்கியவர்களில் 6 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் முழு பின்னணியையும், காரணங்களையும் கண்டறியும் நோக்கில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவினையும் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தமை தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு, இந்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சம்பவத்துக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.