வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (22) சிகிச்சை பலனின்றி குடும்ப பெண் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த யாழ்.பருத்தித்துறை - திக்கம் அல்வாய் பகுதியை சேர்ந்த 47 வயதான பரமநாதன் சகிகலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் (21) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த குடும்ப பெண்ணின் கணவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 13 ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் தகராறு தீவிரமடைய மனைவி தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய போது, கணவன் தன்னிடமிருந்த லைற்றர் மூலம் மனைவிக்கு தீ வைத்ததாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.