டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் தப்பியோட்டம் ; மீண்டும் பொது மக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார்
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (27) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக விவகாரம் ; சட்டத்தை மீறும் பிக்குகளுக்கும் தப்ப முடியாது ; நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை
பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) வயோதிப தம்பதியினர் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை - பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை (23) பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், விளக்கமறியலில் இருந்த சந்தேகநபருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் இன்று அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.