அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக விவகாரம் ; சட்டத்தை மீறும் பிக்குகளுக்கும் தப்ப முடியாது ; நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை
அனுராதபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் சட்டரீதியாகப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கும் என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்புயிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அப்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாட்டின் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தவித பாகுபாடுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பௌத்த பிக்குகளாக இருந்தாலும் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொழிலாளி என விமர்சித்து அவதூறு பரப்பியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறினார்.
விசாரணைகளின் போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் மூலம் பொறுப்பற்ற வகையில் வெளியிடப்பட்ட கருத்துகள் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான மன உளைச்சலும் சமூக பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கக்கூடும் என குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறான கருத்துகளை வெளியிட்டவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேருக்கு மேல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.