கிளிநொச்சியில் நடுத்தெருவில் 27 இலட்சத்தில் இப்படியொரு அபிவிருத்தி தேவையா?
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 வீதியில் சுமார் 50 மீற்றர் நீளமும், 20 மீற்றர் அகலத்திலும் இரண்டு வரி கல் அடுக்கப்பட்டு மண் பறித்து புல் வைத்து சில மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் கரைச்சி பிரதேச சபையிடம் ஊடகவியாலாளர் மு.தமிழ்ச்செல்வன் என்பவர் தகவல் கோரியிருந்த நிலையில் வழங்கப்பட்ட தகவல் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- திட்டத்தின் பெயர் - பசுமை நகரம் அமைத்தல்
- செலவு செய்யப்பட்ட மொத்த நிதி - 27 இலட்சம் ( UNDP/CDLG, 20 இலட்சம், சபை நிதி 7 இலட்சம்)
- ஒப்பந்தம் செய்தது - விநாயகபுரம் விடிவெள்ளி சனசமூக நிலையம்
- ஒப்பந்த காலம் -02.11.2022 ஆரம்பித்து 20.03.2023 நிறைவு
- நிதி இதுவரை (30.03.2023) விடுவிக்கப்படவில்லையாம்?
- தொழிநுட்ப உத்தியோகத்தர் 11 தடவைகள் நேரில் சென்று பார்த்துள்ளாராம்?
இங்கே மக்களிடம் உள்ள கேள்வி இதுதான் நடுத்தெருவில் இப்படியொரு அபிவிருத்தி பணி 27 இலட்சம் செலவு செய்து அமைக்க வேண்டுமா? இந்த வேலைகளுக்கு 27 இலட்சம் தேவையா? எந்த அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியது? சமூகத்தில் ஏராளமான அத்தியாவசிய, முக்கியமான தேவைகள் உள்ளன. பசுமை நகரம் அமைக்கப்பட வேண்டிய பல இடங்கள் உள்ளன.
இருந்தும் ஏன் நடுத்தெருவில் இதனை மேற்கொள்ள வேண்டும்? இந்த திட்டமிடலை மேற்கொண்ட அந்த அறிவாளிகள் யார்? போன்ற கேள்விகள் மக்களிடம் உண்டு ஆனால் இவை எவற்றுக்கம் எவரும் பொறுப்புக் கூறமாட்டார்கள்.
இதுவே வடக்கின் சாபக்கேடு. இதனால்தான் ஊழல்வாதிகள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வலம் வருகின்றார்கள் என குறித்த ஊடகவியாலாளர் முகநூலில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

