புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகளைத் தொடங்கி வைக்கும் ஜனாதிபதி
நாடளாவிய ரீதியில் 50 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய கருத்திட்டத்தின் முதற்கட்டமாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்கு பின்னர் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 424 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,அபிவிருத்தி பணிகள் இலங்கை விமானப்படைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் இந்த அபிவிருத்தி பணிகளை நிறைவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் கனவு இலக்கு கருத்திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று காலை 11 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் பிரதான போக்குவரத்து ஊடகமாக புகையிரத சேவை காணப்படுகின்ற நிலையில் பொதுபயணிகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மருதானை புகையிரத நிலையத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்து, புகையிரத நிலையத்தில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் மாத்திரம் கனவு இலக்கு கருத்திட்டத்தின் கீழ் தனியார் துறையினரின் பங்களிப்புடன் நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிடுகையில், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்கு பின்னரே முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இதற்காக 424 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது.பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
பயணிகளுக்கான ஓய்வறை, தொழில்நுட்ப தகவல் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் பேருந்து நிலையத்தில் உள்ளடக்கப்படும் என்றார்.
இலங்கை விமானப்படையின் பணிப்பாளர் நாயகம் நிர்மாணிப்பு பொறியியலாளர் எயார் வைஸ் மார்ஷல் வஜித சேனாதீர,இந்த அபிவிருத்தி பணிகளை ஆரம்பிப்பதற்குரிய சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமான படையின் தொழில்நுட்பவியலாளர்கள்,பொறியியலாளர்கள் உட்பட இதர ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.