பெண் பாலியல் துஷ்பிரயோகம் ; நிதி நிறுவன முகாமையாளருக்கு கடூழிய சிறைத்தண்டனை
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 20 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 15 லட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும், அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருட கடூழிய சிறை தண்டனையும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி நிறுவன முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைய நிதி நிறுவன முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிசார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில்,
கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடயப் பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.
எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்டஈடாக வழங்குமாறும்,
அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.