நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் ; விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கு, குறிப்பிட்ட அறைத் தொகுதியில் இருந்த கைதிகள் அதிகாரிகளிடம் ஏனைய கைதிகள் குறித்து தவறான தகவல்களை வழங்கியமையே முக்கிய காரணம் என நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் சாட்சியம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், சம்பவ இட ஆய்வு அறிக்கைகள், கைதிகளின் வாக்குமூலங்கள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது மற்றும் ஏழாவது சிறைச்சாலைப் பிரிவுகளில் இருந்த கைதிகளுக்கு இடையிலான பகைமையே மோதலுக்கு அடிப்படைக் காரணமாக இருந்ததாக மற்றுமொரு கைதி சாட்சியமளித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதி ஒருவர் தகவல்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த முரண்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக் குழுவின் கள ஆய்வுகளின்படி, கடந்த ஜூலை 5ஆம் திகதி நண்பகல் முதல் ஜூலை 6ஆம் திகதி வரை சிறைச்சாலையின் கட்டுப்பாடு கைதிகளின் வசம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவை உடைத்துக் கைதிகள் அங்கிருந்த மருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டதாகவும், அவற்றைப் பயன்படுத்திய பின்னர் சிலர் சுயநினைவை இழந்த நிலையில் வன்முறையாக நடந்துகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் பெண் கைதிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரும் , சில கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு கைதிகளை மாற்றியபோது சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
கைதிகள் மரக்கட்டைகள், கற்கள், பூந்தொட்டிகள், கூரை ஓடுகள், கண்ணாடித் துண்டுகள், இரும்புக் கம்பிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியதாகக் காயமடைந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளே சென்று, கைதிகளின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறியபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் கூச்சலிட்டதாகவும் சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆண் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையை உடைத்து அங்கிருந்த மருந்துகளை எடுத்துப் பெண் கைதிகள் இருந்த திசையில் வீசியதாகவும், பெண் கைதிகள் அவற்றை உட்கொண்டதைத் தாம் கண்டதாகவும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்தவும், அதற்குத் தகுந்த தீர்வுகளை வழங்கவும் சிறைச்சாலை நிர்வாக அதிகாரிகள் தவறியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும், அந்த ஆய்வின் பரிந்துரைகளுக்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகளும் நீதியமைச்சின் செயலாளரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், சம்பவத்துக்குப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.