யாழ். நெடுந்தீவுக்கான படகு சேவைகள் முடக்கம் ; மக்கள் விசனம்
யாழ்ப்பாணம், குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையிலான படகுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வந்த ‘நெடுந்தாரகை’, ‘வடதாரகை’ ஆகிய படகுகள் ஏற்கனவே பழுதடைந்திருந்த நிலையில், போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘குமுதினி’ படகும் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (28) மாலை சுமார் 4.30 மணியளவில், குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு ‘குமுதினி’ படகு பயணத்தை ஆரம்பித்தது.

எனினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், படகு கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட இலங்கை கடற்படையினர், தமது படகில் சென்று குமுதினியில் இருந்த பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் குறிகட்டுவான் பகுதிக்கு அழைத்து வந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நெடுந்தீவிலிருந்து ‘கரிகாலன்’ என்ற தனியார் படகு குறிகட்டுவானுக்குச் சென்று, அங்கு காத்திருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் நெடுந்தீவுக்குச் சென்றடைந்தது.
பழுதடைந்த குமுதினி படகும் பின்னர் நெடுந்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே, புதன்கிழமை (29) காலை நெடுந்தீவிலிருந்து ‘சத்சரா’ என்ற தனியார் படகு புறப்பட்டு, குறிகட்டுவானிலிருந்து காலை 8.30 மணியளவில் மீண்டும் நெடுந்தீவு நோக்கிப் பயணிக்கத் தயாரானபோது, அரச உத்தியோகத்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் நெடுந்தீவு மக்கள் எனப் பலர் படகில் ஏறுவதற்காகக் காத்திருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பயணிகளை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவைச் சென்றடைவதற்குச் சுமார் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் நிலையில், இவ்வாறான நீண்ட கடற்பயணத்தின்போது படகுகள் பழுதடைவதும் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படுவதும் மக்களின் அன்றாடப் போக்குவரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.
குறிப்பாக, அரச உத்தியோகத்தர்கள், அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணிப்போர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன், நெடுந்தீவின் சுற்றுலாத்துறையும் பாதிப்பை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, நெடுந்தீவுக்கான படகுப் போக்குவரத்தைச் சீரமைத்து, பழுதடைந்த படகுகளை விரைவாகத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.