கமேனியின் அதிநவீன பதுங்கு குழி அழிப்பு; 50 போர் விமானங்கள் 100 குண்டுகள் பயன்படுத்திய இஸ்ரேல் இராணுவம்
தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி (Ali Khamenei) உயிருடன் இருந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான நிலத்தடி பதுங்கு குழி ஒன்றை இலக்கு வைத்து பாரிய வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிநவீன பதுங்கு குழி
சுமார் 50 இஸ்ரேலிய போர் வானூர்திகள் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாகப தெரிவிக்கப்படுகின்றது. தெஹ்ரானின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தடி வளாகத்தின் மீது சுமார் 100 குண்டுகள் வீசப்பட்டு அவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலத்தடி வளாகம் தெஹ்ரான் நகரின் பல வீதிகளுக்குக் கீழ் நீண்டு பரந்திருப்பதாகவும், இதில் உயர்மட்டக் கூட்டங்களை நடத்துவதற்கான பிரத்தியேக அறைகள் மற்றும் பல நுழைவாயில்கள் இருந்ததாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
அலி கமேனி கொல்லப்பட்ட பின்னரும், ஈரான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இந்த நிலத்தடி வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது.
இஸ்ரேல் உளவுத்துறையின் 'பிரிவு 8200' மற்றும் 'பிரிவு 9900' ஆகியன பல வருடங்களாக மேற்கொண்ட நுணுக்கமான திட்டமிடலின் பின்னரே இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த காலங்களில் அவசர காலத் தலைமையகமாகப் பயன்படுத்துவதற்காகவே இந்த அதிநவீன பதுங்கு குழி வடிவமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.