ஹெய்ட்டி அமைதிப்படை பணிக்கு இலங்கை காவல்துறை சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு பயணம்
இலங்கை காவல்துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, ஐக்கிய நாடுகள் சபையின் குற்றக்குழு ஒழிப்புப் படையில் (Gang Suppression Force - GSF) பணியாற்றுவதற்காகக் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் (STF) 45 உறுப்பினர்களைக் கொண்ட முதற்கட்டப் பிரிவு கடந்த 16ஆம் திகதி ஹெய்ட்டி நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த விசேட அணியில் 7 ஆய்வாளர் தர அதிகாரிகளும், 38 ஏனைய நிலை உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் ஹெய்ட்டியில் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் கீழ் தமது அதிகாரப்பூர்வ கடமைகளை மேற்கொள்வர்.
பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வானூர்தி மூலம் இவர்கள் பயணமாகினர்.
காவல்துறை தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிறப்பு அதிரடிப் படையின் பதில் கட்டளை அதிகாரி, பிரதி காவல்துறை மாஅதிபர் ரோய் சுமனவர்தன ஆகியோரின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்தப்பயணம் ஒருங்கிணைக்கப்பட்டது.
வானூர்தி நிலையத்தில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் நேரில் வருகை தந்து, ஹெய்ட்டி செல்லும் அதிகாரிகளுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.