வடக்கு, கிழக்கில் 55 பேர் கைது; வெளிவந்த சட்டவிரோத செயற்பாடுகள்
இலங்கை கடற்படையினரால் ஒக்டோபர் 02 முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 55 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 50 நபர்களுடன் 33 டிங்கி படகுகளும், ஒரு (01) கனோய் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்
கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட திருகோணமலை பவுல் பொயிண்ட், லங்காபட்டுன, நாயாறு, தொடுவாய், கதிரவேலி, மார்பிள் பீச், இறக்கண்டி, யாழ்ப்பாணம் சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, கோவிலன், புதுமாத்தளன், புத்தளம் முகத்துவாரம் மற்றும் கல்லாறு ஆகிய கரையோர மற்றும் கடற்பிரதேசங்களில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, முல்லைத்தீவு, மூதூர், குச்சவெளி, வாழைச்சேனை, கோட்பே, யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் புத்தளம் ஆகிய இடங்களிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 13 ஆம் திகதி தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 5 நபர்களுடன் 01 பலநாள் மீன்பிடிப் படகும் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்களும் பலநாள் மீன்பிடிப் படகும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.