அரசாங்கம் மீது குற்றச்சாட்டு ; சட்டவிரோத மீன்பிடிக்கு ஆதரவு வழங்கப்படுகிறதா?
கடற்றொழில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டப் போராட்டம் குறித்து வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் அறிவித்தல்களை விடுத்துள்ளது.
வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில், கடற்றொழில் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும் நேற்று(25) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய கடற்றொழிலாளர்களின்; அத்துமீறல்கள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைத் தடுக்கும் 1996ஆம் ஆண்டின் 02ஆம் இலக்கச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் இன்று ஆராயப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்காக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாண கடற்றொழிலாளர்களை ஒன்றிணைத்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இணையத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், வாழ்வியலில் முன்னேற்றம் இல்லை. சட்டங்கள் புத்தகங்களில் மாத்திரமே உள்ளன.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை நாடியுள்ளது போல, ஏனைய பகுதி கடற்றொழிலாளர்களின்; பிரச்சினைகளுக்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேநேரம் புதிய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று எம்.எம் ஆலம் குறிப்பிட்டார்.
சிறு கடல்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதற்கு அரசாங்கமே ஒத்துழைப்பு வழங்குகிறது.

அண்மையில் கற்பிட்டி கடற்றொழிலாளர்களுக்கு சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி தருவதாக ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தநிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திக்க ஆளுநர் ஊடாக அனுமதி கோரியும் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும், அவர் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவும் முன்னர் தம்முடன் இணைந்து வீதியில் போராடிய கடற்றொழில் அமைச்சர், தற்போது பதவியைப் பெற்ற பின்னர் மௌனம் காப்பதாக இந்த நிகழ்வின்போது விமர்சிக்கப்பட்டது.
நோர்வே முதலீட்டாளர்களுடன் அமைச்சர் தற்போது பேச்சுவார்த்தை நடத்துவது குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், நோர்வேயிலுள்ள தமிழர்கள் இது குறித்து அமைச்சருக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மன்னார் முதல் ஏனைய பகுதிகளிலும் அபிவிருத்தி என்ற போர்வையில் சீன கடலட்டைப் பண்ணைகள் மூலம் தமிழ் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் இந்த சந்திப்பின்போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், தமது அதிருப்தியை பதிவுசெய்தனர்.