தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; மேலும் ஒரு சந்தேகநபர் கைது
கொழும்பு தெஹிவளையில் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால், நேற்று கொட்டாவ காவல்துறை பிரிவில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி தெஹிவளை, வேரத்தன்ன வீதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது துப்பாக்கிதாரியாக இவரே செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியைப் பயன்படுத்திய மற்றுமொரு சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் 2013ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகிய ஒரு முன்னாள் இராணுவ உறுப்பினர் ஆவார்.
அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தெஹிவளைப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கியையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி கொஹுவலை காவல்துறை பிரிவில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்த கொலை முயற்சிச் சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் வழிகாட்டலின் கீழேயே இந்த இரண்டு குற்றங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.