மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம்
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக 9 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கோரலின் போது 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைத்துள்ள நிலையில், அவை யாவும் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், சாதகமான யோசனைகள் ஆய்வு செய்யப்பட்டு, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளைய தினம் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.