உயிரிழந்த இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத்; கிடைத்த கௌரவம்!
தமிழகத்தின் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை புதிய பல்கலைக்கழகத்திற்கு சூட்ட உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஊட்டி அருகே குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
இந்நிலையில், பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட்டில் அவரது நினைவாக புதிதாக கட்டிவரும் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என சட்டமன்றத்தில் எம் பி ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்திற்கு பிபின் ராவத் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, ராணுவ தியாகிகளுக்காக கட்டப்படும் நினைவிடத்திற்கும் பிபின் ராவத் பெயரை சூட்ட வேண்டும் என சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.