பெங்களூருவை விட்டு வெளியேறினால் 50 கோடி ரூபா ; அசரவைத்த சலுகை!
இந்தியாவின் பெங்களூருவுக்கு வெளியே உள்ள நகர்களில் புதிதாக ஸ்டார்-அப் நிறுவனங்களைத் தொடங்குபவர்களுக்கு கர்நாடக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல், மக்கள்தொகை அடர்த்தி, வீட்டு வாடகை உயர்வு உள்ளிட்டவைகள் சாமானிய மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நூறு பேருக்கு மட்டுமே வாய்ப்பு
இது ஒருபுறம் இருந்தாலும், அதிகளவிலான மக்கள் தொகை அடர்த்தி, வேலைத்தேடி பெங்களூருவுக்கு வரும் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஸ்டார் அப் நிறுவனங்களும் அதிவேகமாக உருவாகி வருகின்றன.
இதனால், பெங்களூரு மட்டும் வேகமாக வளர்ந்த நிலையில் மற்ற மாவட்டங்கள் போதிய வளர்ச்சியைப் பெறவில்லை.
இந்த நிலையில், கர்நாடக அரசு, தனது தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2025 – 2030 இன் அடிப்படையில் இரண்டாம் தர நகரங்களில் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தும் முயற்சியாக புதியதாக தொழில் தொடங்கவுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகளை வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள இரண்டாம் தர நகர்களான மைசூரு, மங்களூரு, ஹுப்லி - தர்வாத், பெலகாவி, கலபுரகி, ஷிவமோகா, தேவநகரி, தும்மகூரு உள்ளிட்ட இடங்களில் ஸ்டார் அப் நிறுவனங்களை ஆரம்பிப்பவர்களுக்கு பல்வேறு மானியங்கள், சலுகைகள் வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக கர்நாடக அரசு இந்திய ரூபாயில் சுமார் 960 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது.
ரூ.2 கோடி வரையிலான வாடகையில் சுமார் 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், சொத்து வரியில் மூன்று ஆண்டுகளுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடியும், மின்சார கட்டணத்தில் 5 ஆண்டுகளுக்கு 100 சதவிகித தள்ளுபடியும் பெறலாம்.
அதேபோன்று, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்களில் 25 சதவிகிதத்தையும் திரும்பப் பெறலாம்.
அதுஅம்ட்டுமல்லாது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செலவுகளில் சுமார் ரூ.50 கோடி வரையில் 40 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், முதலில் வரும் நூறு பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.