சகோதரியின் கணவரைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை
சகோதரியின் கணவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த திருமணமாகாத மைத்துனருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
தனிப்பட்ட தகராறு
2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு நீண்டதில், அவரது சகோதரியின் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ், சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்த மென்மையான தண்டனையும் இல்லை என முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்ரம தெரிவித்தார். இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.
மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.