வடக்கு கிழக்கில் உயிராபத்து; பாதுகாப்பு கோரும் தேரர்!
வடக்கு, கிழக்கில் பௌத்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாகத் தனக்குக் கடுமையான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அரிசிமலை பனாமூரே மகாநாயக்க தேரர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த அரசாங்கத்தினால் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் ஊடாக வழங்கப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடந்த 12ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தீவிரவாத மற்றும் இனவாதக் குழுக்களால் நீதிமன்றங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
தான் வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களைப் பல தரப்பினர் உன்னிப்பாகக் கண்காணித்து, திட்டமிட்டுச் சம்பவமொன்றை ஏற்படுத்தக் காத்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில், கிண்ணியா பகுதியிலிருந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று கத்திகளுடன் விகாரைக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாகச் செயற்பட்டதன் காரணமாக அவர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.