செம்மணிப் புதைகுழி அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ வேண்டுமென்றே நீக்கம்!
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி தொடர்பான அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல்லை பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.
செம்மணிப் புதைகுழி வழக்கு விசாரணைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளால் இந்த நகர்த்தல் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரம்
பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், ‘பெரும் புதைகுழி’ என்ற சொற்றொடர் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் சமர்ப்பித்த அறிக்கைகளில் இந்தச் சொற்றொடர் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய அறிக்கையில் அது விடுபட்டிருப்பது தீவிரமான சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அகழ்வுப் பகுதியை வழக்கமான அடக்க இடமாகக் கருதுவதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா என்பதை அறிக்கை தெளிவுபடுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இதற்காக மயானப் பதிவுகள், நிலப் பயன்பாட்டின் வரலாறு, தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் மற்றும் நம்பகமான சான்றுகள் ஆராயப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மனித எச்சங்கள் காணப்படும் ஆழம், அவற்றின் பரவல், மண் அடுக்குகளில் அவற்றின் அமைவிடம் மற்றும் நிலை ஆகியவை தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் முக்கியமானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் அவதானிப்புகள் வழக்கமான அடக்கம் என்ற விளக்கத்துடன் பொருந்துகின்றனவா என்பதையும், முடிவுகளுக்கு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் ஒப்பீட்டுச் சான்றுகள் எவை என்பதையும் அறிக்கை தெளிவுபடுத்த வேண்டும் என நகர்த்தல் பத்திரத்தில் கோரப்பட்டுள்ளது.