மனதளவில் தகுதியுடன் இருக்கிறாரா ; டெய்சி பாட்டிக்கு நாளை பரிசோதனை
யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி பொரஸ்ட், வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு மனதளவில் தகுதியுடன் இருக்கிறாரா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் நாளை(11) இந்த பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் இன்று(10) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனதளவில் தகுதியுடன் இருக்கிறாரா?
இதன்போதே, டெய்சி பொரஸ்ட் மனதளவில் தகுதியுடன் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இருந்து சிறப்பு மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெறுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அந்த மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னரே, அவர் இந்த வழக்கிலும் விசாரணைக்குத் தகுதியானவரா என்பதைக் கருத்தில் கொள்ள முடியும்.
எனவே, மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தார்.
உண்மைகளைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கை மீண்டும் பெப்ரவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி பொரஸ்ட், மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.