பதுளை மண் சரிவில் தன் ஒரே மகளை இழந்த தாயார்; கண்ணீர் கோரிக்கை
கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் பதுளை, கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் காணாமல் போன தனது ஒரே மகளை தாய் தேடி வரும் துயர சம்பவம் பதிவாகியுள்ளது.
21 வயதான காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ என்ற யுவதி மண் சரிவில் சிக்கி 11 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

11 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை
அந்த கிராமத்தில் மண் சரிவில் சிக்கி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன யுவதியின் உறவினர்கள் மூவரும் இதில் அடங்குவர். அதன்படி யுவதியின் பாட்டனார் மற்றும் பாட்டி ஆகியோரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
மண் சரிவில் இருந்து தப்பியோடும் போது மகள் அதில் சிக்கிக் கொண்டதாக தாய் தெரிவித்துள்ளார்.
தனது மகள் இந்த மண்மேட்டிற்குள் இரண்டடி அல்லது மூன்றடி ஆழத்தில் எங்கோ இருக்கிறார் என உறுதியாக நம்புவதாகவும், நான் ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவை இங்கே வந்து தேடுகிறேன்.
தயவுசெய்து யாராவது வந்து என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள் என தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட முயற்சித்த போது மகள் தோட்டப் பக்கம் பாய்ந்ததாகவும், மகள் கை நழுவியதாகவும், இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தாய் தெரிவித்தார்.
அவரது மகன் அருகில் உள்ள வயலில் இருந்து ஓடிவந்து என்னை காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.
எனினும் மகளைக் காப்பாற்ற முடியவில்லை. மகள் மிகத் திறமையானவர் எனவும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்லவிருந்ததாகவும் யுவதியின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.