காவன்திஸ்ஸவின் யானையின் மரணம் குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ என்ற தந்த யானையின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக மரண பரிசோதனை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கல்கமுவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்கமுவ பதில் நீதவான் காஞ்சனா ஹத்துருசிங்கவினால் இன்றைய தினம் (17) கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யானையின் மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்காகப் மரண பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், பரிசோதனையின் பின்னர் யானையின் உடலை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யுமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, எதிர்காலத்தில் யானையின் தந்தங்களை மீளப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுடன், அந்த இடத்திற்குப் போதுமான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் எனவும் பதில் நீதவான் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிக்கையிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீகலேவ வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனச்சரகப் பாதுகாவலர் டப்ளியூ. வீரக்கோன் உள்ளிட்ட வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்கள் மற்றும் அறிக்கைகளைக் கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் காலங்களில் கல்கமுவ பிரதான நீதவான் ரவீந்திர ரஞ்சன் பண்டார முன்னிலையில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.