யாழ்ப்பாண மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும்போது, 2017ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.

சுற்றாடல் மாசுபாடு
சுற்றாடல் மாசுபாட்டை குறைக்கும் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் உத்தரவிடுமாறு கோரி, மருத்துவர் உமா சுகி நடராஜா என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரெ, 2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குப்பைகள் மற்றும் கழிவுகளை திறந்த வெளியில் எரிப்பதைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
அந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இந்தக்காற்று மாசைக் குறைக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணி தாபரெ குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமது உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், விசாரணையை 2026 ஜனவரி மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.