பிரமிட் திட்டத்தில் மோசடி செய்தவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிரமிட் திட்டம் (Pyramid Scheme) ஒன்றை நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களும், எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிதி மோசடி
பிரமிட் திட்டத்தை நடத்துதல், அதனை மேம்படுத்துதல் மற்றும் அந்தக் கட்டமைப்பை முகாமைத்துவம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், கடந்த 23 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட இரத்மலானை, பன்னிபிட்டிய, கல்நெவ, ஹோகந்தர, பேராதனை மற்றும் கொழும்பு 04 பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.