யாழ். நகர சபை தவிசாளரை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வடமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விசாரணையை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், முன்னதாக வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடைக் கட்டளையையும் இரத்து செய்து மனுக்களை முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்குகள் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மனுதாரர்களின் ஆரம்ப சமர்ப்பணங்களை ஏற்று அன்றைய தினம் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியிருந்தது.

இதனையடுத்து, வடமாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இவ்வாறான எழுத்தாணை வழக்குகள் அரச இயந்திரத்தின் செயற்பாட்டை பாதிக்கும் என வாதிட்டார்.
மேலும், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக்கு முன்னரே அதனைத் தடுக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை, மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டது.
விசாரணை தொடர்பான தகவல் வர்த்தமானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த போதிலும், அது வெளியிடப்படுவதற்கு முன்னரே தகவல் வெளியானதாகக் கூறி இடைக்கால நிவாரணம் கோரப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.