உயர்தர பரீட்சையை ஒத்திவைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை ; எச்சரிக்கும் உதய கம்மன்பில
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
ஒகஸ்ட் 10ஆம் திகதி பரீட்சை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முந்தைய தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்களுக்கு தயாராக மிகக் குறுகிய காலமே கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர்களின் படிப்பு மற்றும் தயாரிப்பு காலம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் மாணவர்களின் சமத்துவ உரிமை பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பும் உள்ளதாக குறிப்பிட்டதுடன், பரீட்சை அட்டவணையை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தையும் கல்வி அமைச்சையும் வலியுறுத்தியுள்ளார்.