மோட்டார் சைக்கிள் பாலத்திலிருந்து வீழ்ந்து தம்பதி படுகாயம்
பொலன்னறுவை – கொழும்பு பிரதான வீதியின் மின்னேரியா, தாசயஹமார பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாலத்திலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (28) காலை நிகழ்ந்துள்ளது. கதுருவெல, முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

20 அடி ஆழ கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்து
தமபதிகள் கதுருவெலயிலுள்ள தமது வீட்டிலிருந்து ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மின்னேரியா பகுதியில் கிரிதலே குளத்தின் வான் நீரை ஏந்திச் செல்லும் ‘திம்பிரி எல’ கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் பயணித்தபோது, மோட்டார் சைக்கிள் 20 அடி ஆழத்திலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்துள்ளது.
விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்களும் அந்த வீதியால் பயணித்தவர்களும் இணைந்து கால்வாய்க்குள் விழுந்த தம்பதியினரை உடனடியாக மீட்டனர்.
காயமடைந்தவர்கள் ‘1990’ அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. விபத்து தொடர்பில் மின்னேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்லதாக கூறப்படுகின்றது.