கொரோனாவை தடுக்க கிராமங்களை சுற்றிக் கட்டப்பட்ட பிரித் நூல்..
கொரோனா வைரஸ் நுழையாமலிருக்க 6 கிராமங்களை சுற்றி பிரித் நூல் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பௌத்தர்களின் மத அடையாளங்களில் பிரித் நூலுக்கும் முக்கிய இடமுண்டு. இந்துக்கள் உடலில் நூல் கட்டுவதை போல, பௌத்தர்களும் பிரித் நூலை பாதுகாப்பிற்காக தம்முடன் வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக வாகனங்களில் அவை கட்டப்பட்டிருக்கும். கொரோனா அலை நாடு முழுவதும் அடித்து வரும் நிலையில், ஒரு பிரதேச மக்கள், தங்களது கிராமங்களை சுற்றி பிரித் நூலை கட்டியுள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தமது கிராமங்களிற்குள் நுழையாது என்பது அவர்களது நம்பிக்கை. மாவத்தகம, மேதன்வல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள 6 சிறிய கிராமங்களை சுற்றி இந்த நூல் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 20 கிலோமீற்றர் நீளமான நூல் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 பந்து பிரித் நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான பிரித் நூல் இதுவாகவே இருக்கலாமென்று, பிரித் நூலை உருவாக்கிய கலாமுன சமித தேரர் தெரிவித்துள்ளார். தென்னோலைகள் விழுவது, வேறு மரக்கிளைகள் முறிவது போன்ற விடயங்களை கவனித்து கிராமத்தை சுற்றி நூல் கட்டப்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
