யாழில் கொரோனா அச்சுறுத்தல்; பிரபல ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில், மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆலய பூஜைகளில் பங்குபற்றுவதற்கு பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம், மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
ஆலய உள்வீதியில் மாத்திரமே பூஜைகள், சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்தி கடன் நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்னதானம் வழங்கலும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.